திருவள்ளூரை அடுத்துள்ள பெரியப்பாளையத்தில் அமைந்துள்ள பவானி அம்மன் கோயிலுக்கு இந்த திருத்தலங்கள் வாயிலாக உங்களை அழைத்துச் செல்கிறோம்.
அம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றக் கோயில் இந்த பெரியப்பாளையம் பவானி அம்மன் கோயிலாகும். கோயிலுக்குள் நுழைந்ததும் விநாயகர் சன்னதியில் வணங்கிவிட்டு அம்மனை தரிசிக்க செல்ல வேண்டும். அம்மனை தரிசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அம்மன் காட்சி தருவார். அம்மனை வணங்கிவிட்டு வெளியே வரும்போது நமது மனம் லேசாகி இருப்பதை உணரலாம்.
இந்த அம்மன் கோயிலுக்குள் மாதங்கி அம்மனுக்கு தனி சன்னதியும் உள்ளது. மேலும் புற்றுக் கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலுக்கு வந்து அம்மனிடம் வேண்டிக் கொண்டால் நிறைவேறாததும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பொதுவாக ஆடி மாதத்தில் கோயிலில் கூட்டம் அலைமோதும்.
அதில்லாமல் சனி, ஞாயிறுகளில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து கோயிலில் இரவு தங்கி காலையில் செல்வார்கள். கோயிலுக்குள் பொங்கல் வைப்பது, வேப்பஞ்சேலை கொடுப்பது, மொட்டை அடிப்பது, அங்கப்பிரதட்சணம் செய்வது என பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். கோழி, ஆடுகளை கோயிலுக்கு நேர்ந்து விடுவதும் உண்டு.
வாகனங்களில் குடும்பத்துடன் வந்து தங்கி, அங்கேயே சமைத்து சாப்பிடும் குடும்பத்தாரையும் அதிக அளவில் பார்க்க முடிகிறது.
கோயிலுக்குள் தங்குவதற்கான அறைகளும் உள்ளன. பொதுவான பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் அருகே பவானி ஆறு ஓடுகிறது. இது மழைக் காலத்தில் மட்டும்தான் தண்ணீர் நிரம்பி இருப்பதால், பெரும்பாலும் மணல் திட்டாகவே இருக்கும். எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்று மணலில் தங்கிவிட்டு செல்வார்கள்.
அங்கும் தற்போது சிறு குடில்கள் போடப்பட்டு, அவையும் பக்தர்களுக்கு வாடகைக்குக் கிடைக்கிறது.
பக்தர்கள் வந்து செல்லவும் வசதியாக பெரியப்பாளையத்திற்கு அதிகமான பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பெரியப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக அருகாமையில்தான் கோயில் அமைந்துள்ளது. திருவள்ளூரில் இருந்தும், ஆவடி, அம்பத்தூர், மூலக்கடை, ஊத்துக்கோட்டை போன்ற பல இடங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ரயில் மார்கமாக வர வேண்டுமெனில் திருவள்ளூர் வரை ரயிலில் வந்து அங்கிருந்து பேருந்தில் வரலாம்.
மிகவும் முக்கியமான அம்சம் என்னவென்றால், சொந்த வாகனங்களில் பெரியப்பாளையும் போவது மிகவும் சிறப்பாக இருக்கும். பெரியப்பாளையும் போகும் வழிகள் அனைத்தும் கிராமங்களாக இருப்பதால் ஆங்காங்கே இறங்கி இளைப்பாறலாம். வயல் வெளிகளைக் காணலாம். சிறு ஓடைகளைக் கடக்கலாம், பூந்தோட்டங்களையும், பழத் தோட்டங்களையும் ரசிக்கலாம்.
எனவே முடிந்தவர்கள் சொந்த வாகனங்களை ஏற்பாடு செய்து கொண்டு செல்லலாம். பொதுவாக கூட்டம் நிறைந்த நாட்களில் செல்லாமல், சாதாரணமாக திங்கள், புதன், வியாழன் போன்ற நாட்களில் கோயிலுக்குச் சென்றால் கூட்டம் இல்லாமல் அம்மனையும் எளிதாக தரிசிக்கலாம், கடைகளில் உங்கள் விருப்பப்படி பொருட்களை வாங்கலாம்.