முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோயில். இங்குதான் முருகப் பெருமான் தங்கி தேவ குருவாகிய வியாழ பகவானால் பூசிக்கப்பட்டு பிறகு சூரபத்மனை அழித்தார். போரிலே வெற்றிகண்ட பெருமானை தேவர்கள் இத்தலத்திலேதான் பூசித்தனர். சுகப்பிரம்ம ரிஷி, வெள்ளை யானை இவர்கள் பூசித்துப் பேறு பெற்ற தலம்.
இத்திருத்தலத்திற்கு செந்தி மாநகர் என்றும், திருச்சீரலைவாய் என்றும் பெயர்கள் உண்டு. இத்தலம் ஓயாமல், கடல் அலைகளால் மோதப்படுவதால் அலைவாய் என்றழைக்கப்படுகிறது.
அமைவிடம் :
திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர். இக்கோயிலானது தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ் வருகிறது. இத்தலத்திற்கு நேரடியாக மதுரை, திருச்சி, சென்னை, கோவை முதலிய பெருநகரங்களிலிருந்து அரசு விரைவுப் பேருந்துகள் வழியாகச் செல்லலாம். சென்னை-திருநெல்வேலி செல்லும் ரயில் மூலமும் செல்லாம்.
திருச்செந்தூர் சிறப்பு :
திருசெந்தூரின் புராண வரலாற்றை ஆராய்ந்தால், முருகப்பெருமான் சூரபத்மன் மீது படையெடுத்துப் போரிட வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், கிரௌஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடன் வந்து திருச்செந்தூரில் தங்கியதாகவும் அங்கு தேவதச்சனான விஸ்வகர்மனால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கி, தேவகுருவாகிய வியாழ பகவானால் பூசிக்கப் பெற்று அசுரர்களின் வரலாற்றினை அறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.
வியாழ nக்ஷத்திரம் :
வியாழ பகவானால் பூசிக்கப்பட்ட ஸ்தலமாதலின் திருச்செந்தூர் வியாழ nக்ஷத்திரம் என்று போற்றப்படுகிறது. இங்கிருந்துதான் குமரக்கடவுள் வீரவாகுத் தேவரை அனுப்பி, சூரபத்மனுக்கு அறிவுரை கூறி வரச் சொன்னார். வீரவாகு தேவரும் தூதுச் சென்றார். ஆனால், அவரது அறிவுரைகள் சூரபத்மனால் ஏற்கப்படவில்லை. தூது பயனற்றுப் போனது. மேலும் சூரபத்மன் வீரவாகு தேவரை மரியாதை குறைவாக நடத்தி அனுப்பினான்.
சூர சம்ஹாரம் :
பிறகு முருகப்பெருமான் இங்கு அம்பிகையிடம் வேல் பெற்று, சூரபத்மன் மீது போர் தொடுக்கச் சென்றார். சூரபத்மன் அப்போது முருகப் பெருமானுடைய எதிரில் மாமரமாக நின்றான். சூரபத்மனை முருகப் பெருமான் தன்னுடைய வேலாயுதத்தால் இரு கூறாகப் பிளந்தார். மனக் கருணையால் அவனை ஆட்கொண்டார்.
மாமரம் இரண்டாகப் பிளந்தது. பிளந்தவுடனேயே அதன் ஒரு பாதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார். சேவலைக் கொடியாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான்.
வெற்றி நகரம் :
இவ்வாறு சூரபத்மனுடன் போரிட்டு, வெற்றி வாகை சூடி, தேவர்களை சூரபத்மனிடமிருந்து மீட்டு வந்தமையால், திருச்செந்தூர் ஜெயந்திபுரம் என்று வடமொழியால் அழைக்கப்பட்டு வந்தது. அப்பெயரே மருகி செந்தில் என்றாகி, திருச்செந்தூர் என்று வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு புனிதமும் வளமும் மிகுந்த வெற்றி நகரம் என்றும் பொருளுண்டு. செல்வமும் அருள் வளமும் அளிக்க வல்லது திருச்செந்தூர். இத்திருநகரில் முருகப்பெருமான் ஜெயமூர்த்தியாகவே திகழ்கிறார்.
போரில் அசுரர்களை அழித்த முருகனின் வேலாயுதம் பக்தர்களின் பகையையும் அழித்து வருவதில் ஐயமில்லை.
திருமுருகாற்றுப்படை :
இந்நிகழ்ச்சியை உறுதி செய்யும் வகையில் படித்தோரை பரவசமடையச் செய்யும் திருமுருகாற்றுப்படையில்,
"வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை."
திருச்செந்தூர் குறித்து வழங்கும் பதிகங்களும், புராணங்களும், பிரபந்தங்களும் ஏராளம்.
"சிக்கலில் வேல்வாங்கிச் செந்தூரில் சூரசம்ஹாரம்" என்பது பழமொழி. மாமரமாய்க் காட்சியளித்த சூரபத்மனைக் கொல்வதற்காக, முருகப் பெருமான் வேலாயுதத்தை ஏவியபோது அதன் கொடூரம் தாங்காமல் கடலும் பின் வாங்கியதாக அருணகிரிநாதர் தனது திருப்புகழில் குறிப்பிடுகின்றார்.