நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி மக்கள் வெள்ளத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
வேளாங்கண்ணி ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் பெரிய தேர் பவனி நேற்று நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு கோயில் மணிகள் முழங்க, பேராலய முகப்பில் மின் விளக்குகள் மற்றும் மலர் அலங்காரத்துடன் மாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர் பவனி தொடங்கியது.
கடை வீதி, கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு வழியாக பேராலய முகப்பை ஊர்வலம் மீண்டும் அடைந்தது. விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பேராலய வளாகத்தில் குவிந்தனர்.
மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடிதான் தேர் பவனி வந்தது என்று சொல்லும் அளவிற்கு எங்கு நோக்கினும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. மின் விளக்குகள் மிளிர, மக்களின் ஆரவாரங்களுக்கு இடையே அன்னையின் தேர் சிறப்பாக பவனி வந்து பேராலயத்தை அடைந்தது.
நிறைவு நாளான இன்று (செவ்வாய்) காலையில் ஆரோக்கிய அன்னையின் பிறப்பு விழா நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.