சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 20ஆம் தேதி பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 26ஆம் தேதியும், அறுபத்து மூவர் விழா 27ஆம் தேதியும் நடைபெற்றன.
பெருவிழாவின் 9ஆம் நாளான நேற்று காலை தொட்டி உற்சவமும், மாலை 6.30 மணிக்கு மோகினி திருக்கோலமும், கமல விமானம், இரவலர் கோலத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை தரிசித்தனர்.
பத்தாம் நாளான இன்று இரவு 6.30 மணிக்கு உமா தேவியார் மயிலுருவுடன் மகாதேவரை வழிபடல், இரவு 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. திருக்கல்யாண வைபவத்தைக் காண ஏராளமான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வரும் 31ஆம் தேதி முதல் விடையாற்றி விழா துவங்குகிறது. இதையொட்டி கோயில் வளாகத்தில் 10 நாட்களுக்கு கலை நிகழ்ச்சி, சொற்பொழிவு நடைபெற உள்ளது.