நவக்கிரக தலங்களில் ஒன்றாக போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குருபரிகார தலம்) கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஜூன் மாதம் 11-ந் தேதி நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவில் நவக்கிரக தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இங்கு குரு பகவான் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.
வருடந்தோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் இங்கு குருப்பெயர்ச்சி விழா வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் கும்பாபிஷேகம் ஜூன் மாதம் 11-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு 9-ந் தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது.
கும்பாபிஷேக தினமான, 11-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கடம் புறப்பாடு நடத்தப்பட்டு, காலை 10.35 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர், ஆபத்சகாயேஸ்வரர் கும்பாபிஷேகமும், காலை 10.50 மணிக்கு குருதெட்சிணாமூர்த்தி கும்பாபிஷேகமும், காலை 11 மணிக்கு ஏலவார்குழலி கும்பாபிஷேகமும், மாலை 6 மணிக்கு மகாஅபிஷேகமும் நடைபெற உள்ளன.
கும்பாபிஷேகத்தை, சுவாமிமலை எஸ்.பி.சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார், கோவில் தலைமை அர்ச்சகர் என்.ஜோதிராமலிங்க சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தி வைக்கின்றனர்.
அன்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறும்.
கும்பாபிஷேக விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.