புதிய தலைமைச் செயலக கட்டுமானம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராஜ் விலகியத்தை தொடர்ந்து நீதிபதி ரகுபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கடந்த தி.மு.க. அரசு கட்டிய புதிய தலைமைச் செயலகம், சட்டசபையை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, அ.தி.மு.க. அரசு அந்த கட்டிடத்தை பயன்படுத்த மறுத்துவிட்டது.
மேலும், புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தில் முறைகேடு இருப்பதாக கருதி, அதுபற்றி விசாரணை நடத்த ஒருநபர் விசாரணை கமிஷனை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த கமிஷனின் தலைவராக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தங்கராஜ் நியமிக்கப்பட்டார். தங்கராஜ் நியமனத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விசாரணை கமிஷன் தலைமைப் பொறுப்பில் இருந்து தங்கராஜ் திடீரென விலகினார்.
அதைத் தொடர்ந்து தங்கராஜ் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் புதிய தலைமைச் செயலக கட்டுமானம் குறித்த விசாரணையை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.