உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராக பதவி ஏற்று கொண்ட நிலையில், இந்த பதவியேற்பு விழாவுக்கு சில பிரபலங்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இன்று கவர்னர் மாளிகையில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அந்த நேரத்தில் திமுக எம்பி கனிமொழி வரவில்லை என்றும், அவர் தாமதமாக, அமைச்சர்கள் பதவியேற்கும் போது தான் வந்தார் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசனும் இந்த விழாவிற்கு வரவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பதவியேற்பு விழாவிற்கு வராத இன்னொரு பிரபலம் அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் என்று கூறப்படுகிறது. அமைச்சர் பதவியேற்பு விழா முடிந்த பிறகு கவர்னருடன் எடுத்துக் கொண்ட குழு புகைப்படத்தில் பி. டி. ஆர். அவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு புகைப்படத்தில் பி. டி. ஆர். வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
திராவிட இயக்க கொள்கைவழி நின்று, தமிழ்நாட்டினை வளர்ச்சிப்பாதையில் செலுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - கழகத்தலைவர் திரு
முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் பணிகளை மேலும் செழுமைப்படுத்தும் வகையில்,
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்கும், கழக இளைஞரணி செயலாளர் - மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், அன்புச் சகோதரர் திரு உதயநிதி அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
பல்வேறு இடர்பாடுகளை வெற்றிகரமாக முறியடித்து மீண்டும் அமைச்சரவையில் இணையும் அன்புச் சகோதரர் மாண்புமிகு திரு செந்தில் பாலாஜி அவர்களுக்கும், திரு.சா.மு.நாசர் அவர்களுக்கும், புதியதாய் அமைச்சரவையில் பொறுப்பேற்கும் திரு.கோவி செழியன் அவர்களுக்கும், திரு.ராஜேந்திரன் அவர்களுக்கும் எனது அன்பும் - வாழ்த்துகளும்!