கற்பழிப்பு குற்றத்திற்கு சாகும்வரை சிறை: கருணாநிதி கருத்து
, ஞாயிறு, 6 ஜனவரி 2013 (10:40 IST)
பாலியல் கொலை செய்பவர்களை சாகும் வரை தனிமைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கற்பழிப்பு குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பலர் கூறுகின்றனர். ஆனால், சமூக ஆர்வலர்கள், சட்ட நிபுணர்கள் கூறுவதுபோல், நானும் மரண தண்டனையை ஆதரிக்க மாட்டேன். பாலியல் கொலை செய்பவர்களை சாகும்வரை தனிமைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும். எனது கருத்தை மாநில அரசு எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மத்திய மாநில அரசு இது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். முதல்வர் ஜெயலலிதா பாலியல் குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அவ்வாறு கைது செய்யப்படும் குற்றவாளிகள் ஓராண்டு சிறையில் இருந்து வெளியே வந்தபின்னர், அதேபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? பெண்கள் பாதுகாப்புக்கு முதல்வர் அறிவித்துள்ள 13 திட்டங்கள், அவரது நிறைவேறாத வாக்குறுதிகள் பட்டியலில் சேரும். எதிர்க்கட்சியினருக்கு எதிராக குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.