தனக்கு திருமணமே இன்னும் நடக்கவில்லை என்றும் தான் ஈஷா மையத்திலேயே இல்லை என்றும் இளம்பெண் அபர்ணா மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரபல ஆன்மீகவாதியான ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்தில் திருமணமாகாத தனது இரு மகள்கள் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக ஆக்கப்பட்டிருப்பதாக வேளாண்மைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகார் குறித்து ஈஷா மையத்தில் கேட்டபோது, அந்தப் பெண்கள் விரும்பியே இங்கு தங்கியிருப்பதாகத் தெரிவித்தர். அந்தப் பெண்கள் விரும்பினால் பெற்றோருடன் செல்லலாம் என்றும் யாரும் அவர்களைத் தடுக்கவில்லை என்றும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈஷா யோகா மையத்தின் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை கே.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் தண்டபானி, வசந்தா தம்பதி.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ”திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்து வந்த அபர்ணா, யோகா பயிற்சிக்கு சென்ற போது மூளைச்சலவை செய்து ஈஷா யோகா மையத்தில் உள்ள திருமண மையத்தின் மூலமாக திருமணம் செய்து கொண்டார் எனவும் திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்று கொள்ளக் கூடாது என ஈஷா திருமண மையத்தினர் கூறியுள்ளனர்” என்றும் குற்றம்சாட்டி இருந்தனர்.
இளம்பெண் மறுப்பு:
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டினை அபர்ணாவும் அவரது பெற்றோர்களும் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கூறியுள்ள அபர்ணா, “இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு. எனக்கு இன்னும் திருமணமே நடைபெறவில்லை. நான் ஐ.டி. கம்பெனியில்தான் இன்னும் பணி செய்து கொண்டிருக்கிறேன். எனது பெற்றோர்களை ஆத்மார்த்தமாகவே கவனித்துக் கொள்கிறேன்.
இந்த விவகாரத்தினால், 10 ஆண்டுகள் தொடர்பில் இல்லாதவர்கள் கூட, என்னை அழைத்து விசாரிக்கிறார்கள். வெளிநாடுகளில் உள்ள எனது உறவினர்கள் கூட என்ன நடந்தது என்று கேள்வி கேட்கின்றனர்.
இது போன்ற குற்றச்சாட்டை ஈஷா மையத்தின் மீது செலுத்த எனது பெற்றோர்களுக்கு ஊடகங்கள் தான் அழுத்தம் கொடுத்தன. ஈஷா யோக மையத்தின் மீது உள்ள வெறுப்பை வெளிப்படுத்த ஊடகங்கள் எங்களை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்டன.
இதனால், ஒரு பெண்ணின் வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்படும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். என்னால் வெளியிலேயே தலைகாட்ட முடியவில்லை. எங்களையும், உறவினர்களையும் மூளைச்சலவை செய்கின்றனர். இதனால், எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.