ஜீப் மோதி இளம்பெண் படுகொலை - சென்னையில் அதிர்ச்சி
ஜீப் மோதி இளம்பெண் படுகொலை - சென்னையில் அதிர்ச்சி
சென்னை மதுரவாயல் பகுதியில், பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த இளம் பெண் மீது ஜீப் மோதி கொலை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரின் மகள் ரேஸ்மி(27). இவர் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர். போரூரில் தங்கி, ராமபுரத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.
இவர் மதுரவாயல்-தாம்பரம் பைபாஸ் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ரேஷ்மியின் நண்பர் ஒருவரை சந்திக்க அடிக்கடி செல்வார் என்று கூறப்படுகிறது.
அதேபோல், தனது நண்பரை சந்திக்க, கடந்த 4ம் தேதி மதுரவாயல் வந்த ரேஷ்மி, அதன்பின் தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு, தன்னை அழைத்துச் செல்ல வாகனம் வரும் என்பதால், அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஜீப், ரேஸ்மியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரேஸ்மி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அந்த ஜுப்பை ஓட்டி வந்தவர், அங்கேயே வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ரேஸ்மியை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி விட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு போலீசார், ரேஸ்மியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த ஜீப் ஒரு மருத்துவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.
இது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்று விசாரணை செய்து வருகிறார்கள்.