மதிமுகவில் மல்லை சத்யாவிற்கும், துரை வைகோவிற்கும் இடையே ஏற்பட்டு வந்த முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், துரைக்கு ஆதரவாக வைகோ பேசியது குறித்து மல்லை சத்யா வேதனை தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் மல்லை சத்யா - துரை வைகோ இடையே எழுந்த மோதல் கட்சிக்குள் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் துரை வைகோ தனது பதவியையே துறக்கும் நிலைக்கு செல்ல இருவரையும் அழைத்து சமாதானம் செய்த கட்சி நிறுவனர் வைகோ, இருவரையும் கைக்குலுக்க செய்து போட்டோவும் வெளியிட்டார்.
ஆனால் இன்று வைகோவே மல்லை சத்யாவிற்கு எதிராக திரும்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மல்லை சத்யா வெளிநாடுகளுக்கு செல்ல தன்னிடம் கேட்பது இல்லை என்றும், அப்படி சென்றாலும் அங்கு தன்னை மதிமுகவிலிருந்து வருகிறேன் என சொல்லிக் கொள்ளாமல், மாமல்லபுரம் தமிழ் சங்க தலைவர் என்றே தன்னை குறிப்பிட்டுக் கொள்வதாகவும், மேலும் மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்வதாகவும் பேசியிருந்தார்.
இதற்கு வேதனையுடன் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ள மல்லை சத்யா, ”ம.தி.மு.க.வில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடனே இதுநாள் வரை இருந்து வந்துள்ளேன். ஆனால் கட்சியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை. அதற்கு நிச்சயமாக நான் காரணம் இல்லை. கடந்த 9-7-2025 புதன்கிழமை அன்று என் அன்புத் தலைவர் வைகோ எம்.பி. ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தமிழிழத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு புலிப் படை வீரன் மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்து விட்டார் என்று ஒப்பிட்டு பேசினார் .
சான்றோர் பெருமக்களே. நான் மாத்தையா போன்று துரோகியா நீதி சொல்லுங்கள். என் அரசியல் பொதுவாழ்க்கையில் என் அன்புத் தலைவர் வைகோவுக்கு எதிராக நான் சிந்தித்தேன் செயல்பட்டேன் என்பது உண்மையானால் பெரும்புலவர் இளங்கோ அடிகளின் தமிழர்களின் பெருங்காப்பியம் சிலப்பதிகாரத்தின் மூதுரை அரசியல் பிழைத்தோற்க்கு அறமே கூற்றுவனாகட்டும் என்ற நீதி நின்று நிலைத்து என்னை இப்போதே சுட்டெரிக்கட்டும் இறந்து போயிருப்பேன்.
அன்புத் தலைவர் வைகோ தன் மகன் துரை எம்பியின் அரசியலுக்காக 32 ஆண்டுகள் வெளிப்படைத் தண்மையோடு உண்மையாகவும் விசுவாசமாகவும் குடும்பத்தை மறந்து என் வாழ்க்கையின் 32 ஆண்டுகளாக வசந்தத்தை தொலைத்து இரவு பகல் பாராமல் கட்சி, கட்சி தலைவர் வைகோ என்று பணியாற்றி வந்த என் மீது அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப்பட்ட கடந்த 9-7-25 தொடங்கி 13-7-25 ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 5 இரவுகளும் என்னால் தூங்க முடியவில்லை. என் தூக்கத்தை தொலைத்து விட்டேன். என் அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு தலைவர் வைகோ வேறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கலேமே அல்லது ஒரு பாட்டில் விசம் வாங்கி கொடுத்து குடிக்க சொல்லி இருந்தால் குடித்து செத்து போய் இருப்பேனே.
அன்புத் தலைவர் வைகோ அவர்களே அறம் சார்ந்த என் அரசியல் பொதுவாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லா தங்களுக்கு கிடைத்தது வேதனையில் துடிக்கின்றேன் நான். என் அன்புத் தலைவர் வைகோ அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன் இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப் போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம் அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல.
மதிமுகவில் 31 ஆண்டுகால என்னுடைய பயணத்தில் பல்வேறு நிலையில் பொறுப்புகள் வழங்கி அழகு பார்த்த தங்களுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் பணியாற்றி வந்துள்ளேன் யாருக்காகவும் எதற்காகவும் உங்களை நான் விட்டுக் கொடுத்தவன் அல்ல என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். அன்புத் தலைவர் வைகோ அவர்களே காலம் முழுவதும் தங்களுக்கும் மதிமுக விற்கும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன். என்னுடைய அரசியல் முகவரி நீங்கள்தான் தங்களைப் போன்றவரை தலைவராக பெற்றது நான் பெற்ற பேறு உங்களை எப்போதும் என் இதயத்தில் வைத்து பூஜித்து வருவேன் உங்களின் உயர்ந்த அரசியல் நோக்கம் வெற்றிபெற என் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
என்னுடைய இந்த நிலை கட்சியில் இருக்கும் சிலருக்கு மகிழ்ச்சியாகவும் என்னை நிபந்தனையற்று நேசித்த என் அன்புத் தலைவர் வைகோவின் கண்மணிகள் பலருக்கு வருத்தமாகவும் இருக்கும். உங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்றவன் என்ற முறையில் நீங்கள் காட்டிய தூய அன்பிற்கு நான் என்றும் அடிமைப்பட்டவன். உங்கள் ஒவ்வொருவரையும் என் இதயத்தில் ஏந்தியிருப்பேன். கவலைப் பட வேண்டாம் இந்த சோதனையான காலகட்டத்தை கடந்து வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K