வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதை அடுத்து, தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காணப்படுவதன் காரணமாக, வடக்கு வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.