தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் பாஜக மேலிடம் உள்ளது. இந்த பதவிக்கு எஸ்வி சேகர், இல கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், கேடி ராகவன் உள்பட சுமார் 8 பேர் பட்டியலில் இருப்பதாகவும் இவர்களில் ஒருவர் பாஜக தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பாஜகவின் நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றனர்
இந்த நிலையில் பாஜகவிற்கு சம்பந்தமே இல்லாத ரஜினியை பாஜக தமிழகத் தலைவராக நியமனம் செய்ய இருப்பதாக ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ரஜினி அவர்கள் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது உறுதி என்றும் ஏற்கனவே தெளிவுபட கூறியுள்ளார். மேலும் தனக்கு பின்னால் இருப்பது கடவுளும், மக்களும் மட்டுமே என்றும் பாஜக இல்லை என்றும் அவர் தனது பேட்டியில் அடிக்கடி கூறியிருக்கிறார். இருந்தபோதிலும் பாஜகவின் ஒரு சில நடவடிக்கைகளை ஆதரிப்பதை வைத்து, ரஜினி பாஜகவில் சேரப் போகிறார் என்ற வதந்தியை ஒரு சில ஊடகங்கள் தொடர்ந்து பரப்பி வருகின்றன. ஊடகங்கள் தங்கள் டிஆர்பிக்காக ரஜினியை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து வருவது ரஜினி ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இத்தகையை ஊடகங்களை இனம் கண்டு பொதுமக்கள் ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்
ரஜினியை பாஜக கட்சி நிர்வாகிகளில் ஒருவராக நியமனம் செய்ய அமித்ஷாவே விரும்பவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. ரஜினியும் மோடியும் தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருந்தாலும் ஒரே கட்சியில் இருப்பது சாத்தியமில்லை என்று அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனாலும் ஒருசில ஊடகங்கள் தொடர்ந்து இதுகுறித்த வதந்தியை பரப்பும் பணியை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது