தமிழகத்தில் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து உள்ள நிலையில், புதுவையில் மார்ட்டின் மகன் பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்ட்டின் லாட்டரி அலுவலகங்களில் சில நாட்களுக்கு முன்னால் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில், தற்போது பாஜக எம்எல்ஏக்கள் லாட்டரி மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் என்பவருக்கு விழா எடுத்திருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக புதுவையில் தனித்து களம் காண இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ரங்கசாமியின் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு ரங்கசாமி கட்சி தனித்து போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கட்சிக்கு வலுசேர்ப்பதற்காக லாட்டரி மார்ட்டின் மகனை பாஜகவினர் கட்சியில் இணைத்துக்கொள்ள முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. லாட்டரி மார்ட்டின் மகன் சமீபத்தில் பாஜகவினர் நடத்திய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகவும், விரைவில் அவர் பாஜகவில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, "தற்போது அரசியல் பற்றிய கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை; நேரம் வரும்போது கூறுகிறேன்," என்று தெரிவித்தார்.
ஆனால் பாஜக வட்டாரத்தில், "லாட்டரி மார்ட்டின் பாஜகவில் இணைந்தால், பாஜக புதுவையில் வலுப்பெறும்; தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெறும்," என்று கூறி வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், லாட்டரி மார்ட்டின் மகன் சார்லஸ் பாஜகவில் இணைவாரா? இணைந்தால் பாஜக வலுப்பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.