சசிகலா புஷ்பாவை ஜெயலிலதாவும் அவரது தோழி சசிகலாவும் கன்னத்தில் அறைந்ததாக நாடாளுமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பதில் கூறுவாரா என்று எதிர்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற விழாவில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அப்போது பேசிய ஸ்டாலின், “தேர்தலில் நாம் ஆட்சிக்கு வர முடியாவிட்டாலும் அவர்களை தட்டிக் கேட்கும் உரிமையை நாம் பெற்றுள்ளோம். அதிமுக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆகிறது. ஆனால் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச தொடர்ந்து அனுமதி மறுக்கிறார்கள்.
திமுகவைப் பொருத்த வரை நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக உள்ளது.
அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவை ஜெயலிலதாவும் அவரது தோழி சசிகலாவும் கன்னத்தில் அறைந்ததாக நாடாளுமன்றத்தில் கண்ணீருடன் அவர் பேசி உள்ளார். இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா பதில் கூறுவாரா? பதில் கூறியே ஆக வேண்டும்.
இன்று திமுகவை தேடி இளைஞர்கள் துடிப்புடன் ஆர்வத்துடன் வந்து இணைகிறார்கள். இப்படி தினமும் இளைஞர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் போது, இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்கத்தான் வேண்டுமா? இப்போதே திமுக ஆட்சிக்கு வந்து விடுமா? என தமிழக மக்கள் ஆவலுடன் உள்ளனர்” என்று கூறியுள்ளார்.