கணவரை கொன்ற தொழிலாளியை கல்லால் அடித்துக்கொன்று பழிதீர்த்த பெண்ணைகாவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் காளிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 51). இவருடைய மனைவி சுகந்தாமணி (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரங்கசாமியும், அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமாரும் (51) நண்பர்கள். இருவரும் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரங்கசாமியும், ரவிக்குமாரும் மது அருந்திக்கொண்டு இருந்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார், ரங்கசாமியை அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் அடித்ததாக தெரிகிறது. இதில் ரங்கசாமி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை என்பதால் சில நாட்களுக்கு முன்பு ரவிக்குமார் விடுதலை ஆனார்.
சிறையில் இருந்து வெளியே வந்த ரவிக்குமார் காளிபாளையத்துக்கு சென்றார். ரங்கசாமி வீட்டுக்கு சென்ற அவர் எனக்கு எதிராக சாட்சி கூறிய உன்னையும், உன்னுடைய குழந்தைகளையும் கொல்லாமல் விடமாட்டேன் என்று சுகந்தாமணியை மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை வேலை சென்ற சுகந்தாமணி பேருந்து நிலையம் அருகே ரவிகுமார் போதையில் வருவதை பார்த்த சுகந்தாமணி, ரவிக்குமாரின் தலையில் கீழே கிடந்த கல்லை எடுத்து அவர் தலையில் தாக்கினார். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ரவிக்குமார் இறந்தார்.