உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்த பின்னர் மீண்டும் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற இருந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு முறையாக இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அக்டோபர் மாதம் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தும், வேட்பாளர்கள் தங்களது குற்றப் பின்னணி விபரங்களை வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 பரிந்துரைகளை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவாகப் பிறப்பித்தார்.
இந்நிலையில் மணலியை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் தங்களது ரிசர்வ் தொகுதி வார்டை பொது தொகுதியாக அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று செவ்வாயன்று (நவ-22) நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்த பின், டிசம்பர் மாதத்திற்குள் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற உத்தரவை அமல் படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு மற்றும் தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் கேட்டார்.
வேட்பாளரின் குற்றப்பின்னணி விபரங்களை வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும் என உத்தரவை அமல்படுத்த சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசு மேல்முறையீடு செய்யாத நிலையில் தனது உத்தரவை அமல்படுத்தாதது குறித்து, வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டார்.