சென்னையில் இன்னும் 25 நாட்களுக்கு தான் தண்ணீர்: அப்புறம் திண்டாட்டம் தான்?
சென்னையில் இன்னும் 25 நாட்களுக்கு தான் தண்ணீர்: அப்புறம் திண்டாட்டம் தான்?
தலைநகர் சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு வர உள்ளது. ஒரு நாளைக்கு 830 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படும் சென்னையில் தற்போது உள்ள தண்ணீர் இருப்பால் வெறும் 25 நாட்களுக்குத்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகளிலும் 1 டிஎம்சி அளவிற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. ஒரு நாளைக்கு 830 லட்சம் லிட்டர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தேவைப்படுகிறது. அப்படி இருக்கையில், இந்த தண்ணீரை கொண்டு 1 மாதத்திற்கு கூட சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது.
ஆந்திராவின் கங்கா திட்டத்தின் மூலம் அம்மாநில அரசு தருவதாக இருந்த 2 டிஎம்சி நீரையும் முழுமையாக தரவில்லை. தற்போது கூட கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 23 அடி அளவு மட்டுமே உள்ளதால், அந்த நீரை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் என்னசெய்வதென்று தெரியாமல் புலம்பி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், விரைவில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
25 நாட்களுக்கு மட்டுமே தற்போது உள்ள தண்ணீர் கைகொடுக்கும் என்பதால், அதன் பிறகு மிகப்பெரிய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும் பிரச்சனை வரும் என்பதால் ஆந்திராவிடமிருந்து தமிழக அரசு தண்ணீர் கேட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.