Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைகோவை அழைக்காதது ஏன்? - ம.ந.கூ. நிரந்தரம் இல்லை என திருமாவளவன் விளக்கம்

வைகோவை அழைக்காதது ஏன்? - ம.ந.கூ. நிரந்தரம் இல்லை என திருமாவளவன் விளக்கம்
, புதன், 21 டிசம்பர் 2016 (13:04 IST)
மதிமுகவை புறக்கணிக்கவில்லை; வைகோவிடம் இதுபற்றி வெளிப்படையாக பேசி இந்த முடிவெடுத்திருக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.


 

இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய திருமாவளவன், “கடந்த நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த அறிவிப்பு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக, ஊழலை ஒழிப்பதற்காக என்று பிரதமரால் விளக்கப்படுகிறது. ஆனால் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து விட்டு 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ததன் மூலம் கருப்பு பண நடவடிக்கைகள் இரட்டிப்பாக மாறியிருக்கிறது.

பிரதமர் திடீரென்று ஒரு நாள் தோன்றி இன்னும் சில மணி நேரங்களில் இந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது ராணுவ ஆட்சி நடைபெறும் தேசத்தில் ராணுவ அதிபர் செய்கிற அறிவிப்பை போன்று அமைந்திருக்கிறது.

எனவே தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற 28-ஆம் தேதி அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டை புதுச்சேரியில் நடத்துகிறோம். இதில் தோழமை கட்சிகளின் தலைவர்கள் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

மதிமுக இதில் பங்கேற்கவில்லை. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் இதுபற்றி வெளிப்படையாக பேசி இந்த முடிவெடுத்திருக்கிறோம். ம.தி.மு.க.வை புறக்கணிக்கவில்லை. மதிமுகவுக்கு அழைப்பு கொடுக்காமல் தவிர்க்கவில்லை.

மதிமுக கருப்பு பண நடவடிக்கையை ஆதரிக்கிறது. எனவே அதனை எதிர்த்து நடத்துகிற இந்த மாநாட்டில் ம.தி.மு.க. பங்கேற்க வாய்ப்பில்லை என வைகோ வெளிப்படையாக எங்களிடம் கூறினார். அப்படி ஒரு புரிதலுடன் தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம். இதனால் மக்கள் நலக்கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை.

மக்கள் நலக்கூட்டணியில் ஒரே வரையறை தான். உடன்பாடுள்ள பிரச்சனைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது, முரண்பாடான பிரச்சனைகளை பொது மேடைகளில் விவாதிப்பதில்லை. மக்கள் நலக்கூட்டணி நிரந்தர அமைப்பு இல்லை. பிரச்சனைகளின் அடிப்படையில் போராடுகிற போது அது மக்கள் நலக் கூட்டியக்கம்.

தேர்தல் நேரத்தில் இணைந்து செயல்படுகிற போது மக்கள் நலக் கூட்டணி. இப்படிப்பட்ட கூட்டியக்கம் அல்லது கூட்டணி என்பது எப்போதுமே நிரந்தரமாக இருக்க முடியாது. பிரச்சனைகளின் அடிப்படையில் நால்வரும் கைகோர்ப்போம். தேவைப்படும் போது அதற்கான சூழல் உருவாகிற போது மறுபடியும் நால்வரும் ஒரே மேடையில் தோன்றுவோம்” என்று கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவுக்கு நெத்தியடி போஸ்டர்: பொதுமக்களின் கோபத்தை தூண்டாதே!