தேர்தல் முடிந்த பின் பாஜகவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும் என வழக்கு தொடர உள்ளதாக நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வழக்கம்போல இந்த முறையும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 6 தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை வேறு கட்சிக்கு வழங்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தங்களது கரும்பு விவசாயி சின்னத்தை திரும்ப பெற நாம் தமிழர் கட்சி கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சின்னம் ஒதுக்குதலில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “6 தேர்தல்களில் விவசாயி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டுள்ளது. தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அவசர அவசரமாக சின்னம் ஒதுக்கியது ஏன்? சின்னம் ஒதுக்கியதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்துக் கொண்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீத்தை குறைக்க சதி நடக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் “மயில் சின்னம் கேட்டால் அது தேசிய பறவை என தர மறுப்பவர்கள் தாமரை சின்னத்தை மட்டும் ஏன் பாஜகவுக்கு வழங்கினார்கள். நாட்டின் தேசிய மலரான தாமரையை பாஜகவின் சின்னமாக வைத்திருப்பதற்கு எதிராக தேர்தல் முடிந்ததும் வழக்கு தொடர உள்ளேன். ஒன்று பாஜகவிலிருந்து தாமரையை ஒழிக்கனும். இல்லாவிட்டால் தேசிய மலரை மாற்ற வேண்டும். ரோஜா, கனகாம்பரம் அல்லது காலிஃப்ளவரை கூட தேசிய மலராக வைத்துக் கொள்ளட்டும்” என பேசியுள்ளார்.