Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுகவிலிருந்து விலகல் - குஷ்புவின் கடிதம் எழுப்பும் கேள்விகள்

Advertiesment
குஷ்பு
webdunia

அண்ணாகண்ணன்

, செவ்வாய், 17 ஜூன் 2014 (21:05 IST)
நடிகை குஷ்பு, திமுகவிலிருந்து விலகியது, அரசியல் வட்டத்தில் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது. நடிகை குஷ்பு திமுகவிலிருந்து விலகியது கட்சிக்கு நஷ்டம் எனத் திமுகவின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். "கட்சியில் இருந்து விலகுவதும், சேர்வதும் அவரவர் விருப்பம். அவர் விலகியதால் கட்சிக்கு இழப்பு ஏதுமில்லை" எனத் திமுகவின் தென் சென்னை மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன், கூறியுள்ளார். டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் குஷ்புவின் விலகல் குறித்த விவாதம் களை கட்டியுள்ளது. 
 
முதலில் குஷ்புவின் கடிதம் இங்கே:



ஐயா,

என்னை தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக்கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கழக உறுப்பினராகப் பொது வாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நான் நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியதைக் கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை அனைவரும் அறிவார்கள்.
 
ஆனால், என் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ள போது நான் தேர்ந்தெடுத்த பாதையும், பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் விலகுவது என்ற முடிவைக் கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்.
 
இவ்வாறு குஷ்பு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.
webdunia
இந்தக் கடிதத்தில் சில முரண்பாடுகள் உள்ளன.
 
தமிழ் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கழக உறுப்பினராகப் பொது வாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன் என்பவர், என் அர்ப்பணிப்பும் உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கிறது என்கிறார். அது என்ன ஒருவழிப் பாதை? குஷ்பு, திமுகவுக்காக உழைத்தார். பல்வேறு தேர்தல்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். தொலைக்காட்சி விவாதங்களில் திமுகவின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். கட்சிக் கூட்டங்களிலும் கலைஞரின் பிறந்த நாள் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் தொடர்ந்து துடிப்பாகப் பங்கேற்றார். ஆனால், பதிலுக்குத் திமுக அவருக்கு எதுவும் செய்யவில்லை. இதைத் தான் ஒருவழிப் பாதை என்கிறார் அவர்.
 
திமுக என்ன செய்ய வேண்டும்? கட்சிப் பொறுப்புகளையோ, தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பையோ அளிக்கவில்லை. திமுக ஊடகங்களில் கூட, முக்கிய பங்கு எதையும் அளித்துவிடவில்லை. இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலையில் நான் ஏன் கட்சியில் இருக்க வேண்டும் எனக் கேட்கிறார். அதுதான் அவருக்குத் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்திவிட்டது. ஆகவே, கனத்த இதயத்துடன் விலகிவிட்டார்.
 
2010ஆம் ஆண்டு மே 14 அன்று, திமுகவில் குஷ்பு இணைந்தார். நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், 2014 ஜூன் 16 அன்று விலகல் முடிவை எடுத்துள்ளார். நான்கு ஆண்டுகளில் அவர் எதிர்பார்த்தது எதுவும் நடைபெறவில்லை. தனது நேரத்தையும் உழைப்பையும் கொடுத்ததற்குத் தனக்கு உரிய பயன் (ரிட்டர்ன்) கிடைக்கவில்லை என அவர் நினைக்கிறார்.
webdunia
அது சரி. ஆனால், கடிதத்தில் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வந்ததாகவும் அதற்காகவே பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாகவும் தன்னுடைய அர்ப்பணிப்புப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்கள் சேவை, பொது வாழ்க்கை, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு எல்லாம் என்ன பொருள் என்பதைக் குஷ்பு உணர்ந்துள்ளாரா எனத் தெரியவில்லை.
 
உடல், பொருள், ஆவி அனைத்தையும் நாட்டுக்காகவும் கொண்ட கொள்கைக்காகவும் மக்கள் நலனுக்காகவும் அர்ப்பணித்த தலைவர்கள் வாழ்ந்த நாடு, நம்முடையது. பிரதி பலன் பாராது உழைத்த தலைவர்கள் பலர். அரசு தரும் வசதியைச் சொந்தக் காரணத்துக்காகப் பயன்படுத்தக் கூடாது என உறுதியாக இருந்தவர்கள் இன்னும் பலர். 
 
இன்றோ, ஆதாயம் எதிர்பாராமல் எந்தச் செயலும் நடப்பதில்லை. ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாறும் பலரும் முன்வைக்கும் காரணம், தன்னை அந்தக் கட்சி சரியாகப் பயன்படுத்தவில்லை. தனக்கு உரிய வாய்ப்புகளை வழங்கவில்லை. தன் உழைப்புக்கு ஏற்ற மரியாதை இல்லை என்பதே. இவையெல்லாம் சொல்லும் ஒரே செய்தி, எனக்கு என்ன லாபம் என்பதே.
 
குஷ்புவும் இதே பாணியில் செல்வதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால், மக்கள் சேவை, பொது வாழ்க்கை, அர்ப்பணிப்பு என்றெல்லாம் சொல்வது, பெரும் வியப்பு அளிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil