Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”அந்த உண்மையை எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லியிருக்கலாமே” - கவிஞர் அறிவுமதி வேதனை

”அந்த உண்மையை எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லியிருக்கலாமே” - கவிஞர் அறிவுமதி வேதனை
, செவ்வாய், 24 ஜனவரி 2017 (21:32 IST)
அடிக்கப்போறாங்க ஓடிருங்க என்று உங்களுக்குத் தெரிந்த அந்த உண்மையை ஆறு நாட்கள் உங்களோடு உண்டு உறங்கிய எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லியிருக்கலாமே என்று கவிஞர் அறிவுமதி கேள்வி எழுப்பியுள்ளார்.


 

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர சட்டம் இயற்ற கோரியும், பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும், காட்சிப்படுத்தக்கூடாத பட்டியலில் இருந்து காளையை நீக்க வலியுறுத்தியும் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக லட்சக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதியான முறையில் போராடியவர்கள் மீது, தமிழக அரசு காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்தது. அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தினர்.

பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். பெண்கள் என்று பார்க்காமல் காவல் துறையினர் ஆவேசமாக தாக்கினர்.

இந்த போராட்டத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்த பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆர்.ஜே.பாலாஜி, நடிகர் ராகவா லாரன்ஸ், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இந்த போராட்டத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்து, தனது முகநூல் பக்கத்தில் கவிஞர் அறிவுமதி கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

நான் மருத்துவமனையில் சேர்கிறேன் என்று இணையத்தில் செய்தி வெளியிட்டுவிட்டு ராகவா லாரன்ஸ் வெளியேறுகிறார்..

முதல்வருக்கு நன்றி என்று கடிதம் கொடுத்துவிட்டு ஆர்.ஜே.பாலாஜி வெளியேறுகிறார்..

கொடிய மிதிக்கறாங்க, கோக்கைத் திட்டறாங்க என்று திகிலடைந்து ஆதி வெளியேறுகிறார்.

எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.. மூணு மாசம் தள்ளி வைப்போம் என்று அந்தப் பெரிய மனிதர்களும் வெளியேறுகிறார்கள்..

எல்லாம் நேற்று மாலை ஓரிரு மணி நேரத்தில் நடக்கிறது..

உள்ளே இருந்த தன் பிள்ளைகளை வெளியேற்றிய அரசு இன்று நம் பிள்ளைகளை அடிக்கிறது..

இவர்கள் சொல்கிறார்கள் 'மாணவர்களுக்குள் அந்நியர்கள் ஊடுருவிவிட்டார்கள்.. அதனால் வெளியேற்றினோம்...'

ஆறு நாட்கள் மாணவர்களின் போராட்டக்களத்தில் உள்ளே இருந்த இந்த சமரச சன்மார்க்கவாதிகள் எந்தக் கல்லூரிகளில் படிக்கிறார்கள்...

மாணவர்களைத் தீவீரவாதிகளாக்க உங்கள் எஜமானர்கள் சொல்லிக் கொடுத்த கதைகளைச் சொல்லும் நல்லவர்களே..

'அடிக்கப்போறாங்க ஓடிருங்க..’ என்று உங்களுக்குத் தெரிந்த அந்த உண்மையை ஆறு நாட்கள் உங்களோடு உண்டு உறங்கிய எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லியிருக்கலாமே..

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”ஹாய் சாமி, நான் தமிழ்நாட்டுக்காரன்” - சுப்பிரமணிய சாமிக்கு கமல்ஹாசன் நெத்தியடி