தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது முறைகேடு வழக்கில் சிக்கிய செந்தில் பாலாஜி திமுக அமைச்சராக இருக்கும்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது அரசியல் பயணம் இதோ..
கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் பிறந்தவர் செந்தில்குமார் என்னும் செந்தில் பாலாஜி. பள்ளிக் கல்வி, கல்லூரி எல்லாமே கரூரில்தான் படித்தார். கல்லூரி காலத்தில் ம.தி.மு.க கட்சியில் சேர்ந்த செந்தில் பாலாஜியை அரசியல் ஆர்வம் தொற்றிக் கொண்டது. பின்னர் கல்லூரி படிப்பை விடுத்து முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட தொடங்கினார்.
சில காலமே மதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜி பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் சிறப்பாக செயல்பட்ட செந்தில் பாலாஜிக்கு 1996ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை திமுக வழங்கியது. அதன்மூலம் முதன்முறையாக கவுன்சிலராக ஆனார் செந்தில் பாலாஜி.
இப்படியாக திமுக மூலமாக அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த செந்தில் பாலாஜி பின்னர் திமுகவில் சிலருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் அதிமுகவில் இணைந்தார். அதிமுக கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர், கரூர் மாவட்ட செயலாளர் என படிப்படியாக உயர்ந்த செந்தில் பாலாஜி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானார்.
2006ம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற செந்தில் பாலாஜி கரூரில் தொடர்ந்து தனது ஆளுமையை நிலை நாட்டினார். தனக்கான ஆதரவாளர்களை அதிகப்படுத்தினார். திமுக ஆட்சிக்கு எதிராக மணல் கொள்ளை விவகாரங்களில் அவர் துணிச்சலுடன் செயல்பட்டது ஜெயலலிதாவை ஈர்த்தது என்றே சொல்லலாம்.
அடுத்து நடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கரூரில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சராக பொறுப்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகுதான் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் அவர் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுத்த ஜெயலலிதா 2015ம் ஆண்டில் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி, கரூர் மாவட்ட செயலாளர் பதவி என அனைத்து பதவியிலிருந்தும் அவரை நீக்கினார்.
ஆனாலும் தனது செல்வாக்கு மூலம் தொடர்ந்து கட்சி மேலிடத்தை சமாதானம் செய்த செந்தில் பாலாஜி 2016 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்றார். ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அதன்பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கையும் நடுக்கம் காண தொடங்கியது.
அதிமுக இரு அணிகளாக பிரிந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். தகுதி நீக்கத்திற்கு பிறகு அதிமுகவின் இரண்டு அணிகளிலும் சேராமல் புதிதாக டிடிவி தினகரன் தொடங்கிய அமமுக கட்சியில் இணைந்தார் செந்தில் பாலாஜி. அமமுக மாநில அமைப்பு செயலாளராக பொறுப்பேற்ற அவர் பின்னர் கட்சி பூசல்களால் அமமுகவிலிருந்து வெளியேறி தான் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய திமுகவிலேயே இணைந்தார்.
2019ல் நாடாளுமன்ற தேர்தலோடு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு கரூரில் சுற்று வட்டாரத்தில் தனக்குள்ள செல்வாக்கை தனது வெற்றியின் மூலம் நிரூபித்தார் செந்தில் பாலாஜி. இதனால் 2021 சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மேலும் மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறைகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் கடந்த 2015ல் அதிமுக ஆட்சியில் அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் திடீரென அழுத்தம் பெற்று விசாரணைக்கு வந்தன. இதுதொடர்பான அமலாக்கத்துறை சோதனையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
தமிழக பாஜக தலைவரான அண்ணாமலைக்கும், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் பல காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. அண்ணாமலை செந்தில் பாலாஜியை போலவே கரூர் அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர். இந்த மோதலின் காரணமாகதான் செந்தில் பாலாஜி குறித்த பழைய வழக்குகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.