Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது.? முக்கிய தகவலை கேட்டது தேர்தல் ஆணையம்..!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது.? முக்கிய தகவலை கேட்டது தேர்தல் ஆணையம்..!!

Senthil Velan

, திங்கள், 29 ஜூலை 2024 (20:36 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், சட்டப்பேரவை தொகுதி வாரியாக உள்ள வாக்காளர் பட்டியலை வழங்குமாறு தலைமை தேர்தல் அதிகாரியிடம் மாநில தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.
 
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, மாநில தேர்தல் ஆணைய செயலர் கே.பாலசுப்பிரமணியன் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் உள்ள உள்ளாட்சிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல்களை விரைவில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது. 
 
தற்போதுள்ள சட்டப்பேரவை வாக்காளர் பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை ஓவ்வொரு ஆண்டும் அல்லது தற்செயலாக தேவைப்படும் காலங்களுக்கு தயாரிக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளில் தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டு வருகின்றனர். 
 
அதற்கேற்ப மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  இதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி மக்களவை தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட சட்டப்பேரவை தொகுதி வாரியான வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் தற்போது உள்ளாட்சிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டியுள்ளது. 
 
எனவே, கடந்த மார்ச் 28-ம் தேதி சட்டப்பேரவை தொகுதி வாரியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் அச்சிடப்பட்ட பிரதிகள் மற்றும் மென் பிரதிகளை வழங்கும்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தாங்கள் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இதில், அச்சிடப்பட்ட பிரதி மற்றும் மென் பிரதிகளுக்கு இடையில் ஏதேனும் குழப்பங்கள் இருந்தால், அச்சிடப்பட்ட பிரதியே அதிகாரபூர்வமானதாக மாநில தேர்தல் ஆணையத்தால் எடுத்துக் கொள்ளப்படும். 
 
மேலும், தரவுகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். மாநில தேர்தல் ஆணையம், உரிய கள ஆய்வுகள் நடத்தி சரிபார்த்து தனது சொந்த தரவுகளை உருவாக்கும். தேர்தல் ஆணையம் அளிக்கும் தரவுகளை வேறு யாருக்கும் பகிரமாட்டோம்.


தொகுதி வாரியாக தற்போதுள்ள புதிய வாக்காளர் பட்டியல் தரவுகளை அளிக்க அறிவுறுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தகுந்த நேரத்தில் மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவரது ஆட்சியில் சைக்கிளுக்கு பதிலாக ஸ்கூட்டர் வழங்கப்படும்.! அடித்து சொல்லும் பொன்முடி..!!