தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ''பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்பட்டும், சாலையில் மழைநீர் தேங்குவது தொடர் கதையாக இருக்கிறது. தி.மு.க. அரசின் நடவடிக்கை ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைப் போல் அமைந்துள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
''சென்னை உட்பட தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்ற நிலையில், சாலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினை அகற்ற அரசு சார்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், கள யதார்த்தம் என்பது வேறாக இருக்கிறது.
சாலைகளில் நீர் தேங்காவண்ணம், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சென்ற ஆண்டே தமிழ்நாடு அரசு அறிவித்தது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்பட்டும், சாலையில் மழைநீர் தேங்குவது தொடர் கதையாக இருக்கிறது. தி.மு.க. அரசின் நடவடிக்கை ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைப் போல் அமைந்துள்ளது.
இந்த மழைக்கே இந்த நிலைமை என்றால், மிக்ஜாம் புயல் சென்னையை கடக்கும்போது நிலைமை எப்படி இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே தற்போது எழுந்துள்ளது. உண்மை நிலவரத்தை கண்டறிந்து, யதார்த்த நிலையை கேட்டறிந்து, எந்தெந்த சாலைகளில் எல்லாம் மழைநீர் தேங்கி இருக்கிறதோ அங்கெல்லாம் போர்க்கால அடிப்படையில் நீரினை அகற்றவும், மீண்டும் மின்சார இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.'' என்று தெரிவித்துள்ளார்.