Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜல்லிக்கட்டு தடையை நீக்க ஜெயலலிதா என்ன செய்தார்? - திருநாவுக்கரசர் அதிரடி

Advertiesment
ஜல்லிக்கட்டு தடையை நீக்க ஜெயலலிதா என்ன செய்தார்? - திருநாவுக்கரசர் அதிரடி
, வியாழன், 5 ஜனவரி 2017 (10:54 IST)
ஜல்லிக்கட்டு தடையை நீக்க ஜெயலலிதா எழுதிய கடிதங்களை தவிர, அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளை கூற முடியுமா? என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.


 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி இருந்தபோது தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என்று அவரால் கூற முடியுமா? இந்த காலக்கட்டத்தில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்தப்பட்டது. 2006ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு மதுரை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

2009ம் ஆண்டில் திமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு ஒழுங்கு முறை சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடக்க சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதற்கு எதிரான வழக்கையும் உச்சநீதிமன்றத்தில் வாதாடி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டு நடத்த 11.7.2011ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை தான் ஜல்லிக்கட்டுக்கு தடையாக இருக்கிறது என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.

இந்த அறிவிக்கைக்கு பிறகு 2012, 2013, 2014ம் ஆண் டுகளில் ஜல்லிக்கட்டு நடந்ததை அவரால் மறுக்கமுடியுமா? 2015, 2016ம் ஆண்டில் பாஜ ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்?

பாஜ தான் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 2014ம் ஆண்டு மே 7ம் தேதி தான் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. 2016ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதிக்கும் என்று தெரிந்தே, தமிழக பாஜக.வை திருப்திபடுத்த மத்திய அரசு உச்சநீதிமன்ற தடையிலிருந்து பாதுகாத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நிர்வாக ரீதியாக அறிவிப்பு வெளியிட்டது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் துறை மூலம் வெளியிடப்பட்ட இந்த அறிவிக்கை மத்திய அமைச்சரவையில் வைக்கப்பட்டதா?. ஒப்புதல் பெறப்பட்டதா? தேசிய விலங்குகள் நல வாரிய ஆலோசனை பெற முயற்சிக்கப்பட்டதா?. ரவிசங்கர் பிரசாத், மேனகா காந்தி, அருண்ஜேட்லி போன்றவர்கள் எதிர்ப்பார்கள் என்பதால் அமைச்சரவை பார்வைக்கே வைக்கப்படவில்லை.

அதனால் இந்த அறிவிக்கை ஒரு கண் துடைப்பு நாடகம். இதன் மூலம் ‘‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்’’ என்ற ரீதியில் பாஜ நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தால் அவசர சட்டத்தின் மூலம் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

அதற்கான முயற்சியில் தமிழக பாஜ ஈடுபட வேண்டும். அதற்கு மாறாக காங்கிரஸ் கட்சியை சீண்டி பார்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தடையை நீக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதங்களை தவிர, அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளை கூற முடியுமா?

விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களை கொண்டுள்ள அதிமுக எடுத்த முயற்சி என்ன?. ஜல்லிக்கட்டுக்கு ஏன் அவர்கள் குரல் கொடுக்கவில்லை. இதற்கெல்லாம் விளக்கம் அளிக்காமல் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசின் மீது பழிபோட்டு திசை திருப்பி பொறுப்பை தட்டிக்கழிக்க பாஜ, அதிமுகவினர் முயற்சிக்க கூடாது.

கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்காமல் போனதற்கு மத்திய பாஜ அரசும், அதிமுக அரசும் தான் காரணம் என்ற உண்மையை குழிதோண்டி புதைக்கிற முயற்சியில் யார் ஈடுபட்டாலும் வெற்றி வெற முடியாது. தமிழக மக்கள் உண்மையை அறிவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு: அறிவியல் சகாப்தம்!!