ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் எங்கும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தின் தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், வேப்பங்குளம், பூக்குளம், காவனூர் என மொத்தமாக 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியை தமிழக அரசு வழங்காத நிலையில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்க முடியாது என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதால் அங்கு ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டமும், ஆலைகளையும் கொண்டுவர முடியாத நிலையில், தற்போது ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K