Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடரும் கல்வி கொலைகளும் தீர்வுகளும்...

Advertiesment
தொடரும் கல்வி கொலைகளும் தீர்வுகளும்...
, செவ்வாய், 28 நவம்பர் 2017 (12:51 IST)
வேலூர் பகுதியில் நடந்து முடிந்திருக்கிறது, இந்த சமுதாயத்தின் அடுத்த கல்வி கொலை. இதில் யாரும் குற்றவாளிகளாக முடிவு செய்யப்பட போவதில்லை. ஏனெனில், இது ஒரு பெரும் அறிவார்ந்த மனித சமுதாயமே சேர்ந்து நிகழ்த்திய கொலை. ஆசிரியர் திட்டியதால் மாணவிகள் இறந்ததற்கு எப்படி சமுதாயமே பொறுப்பேற்கும்?


 
இதன் விடை எளிது. ஏனெனில், இவர்களின் மரணத்திற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணம் ஆகி விட மாட்டார்கள் எனும் பதிலிலிருந்து இதன் விடையை நெருங்கலாம். இந்த கட்டுரை படித்துக் கொண்டிருக்கும் உங்களில் பலரும் பொது தேர்வுக்கு தயாராகும் அல்லது பள்ளிக்கு செல்லும் ஏதேனும் குழந்தையை உடையவர்களாக அல்லது அவர்களுக்கு வேண்டப்பட்டவராக இருப்பீர்கள். அவர்களின் மீது நீங்களும் இந்த  சமுதாயமும் திணிக்கும் போட்டிகளும் அது சார்ந்த நிர்பந்தங்களும் மேலிருந்து கீழே பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் நியாயமாக தோன்றலாம். ஆனால், அது கீழே இருப்பவர்களின் பார்வையிலிருந்து பார்த்தால் தான் தெரியும் அது எவ்வளவு பெரிய வன்முறை என்பது.
 
2011 வருடத்திற்கு பிறகு குழந்தைகள் மீதான வன்முறை 300 மடங்காக அதிகரித்து விட்டது. இதில் வன்முறைக்கு எதை அளவுகோலாக பயன்படுத்தி இருப்பார்கள் என்பது தெரிந்தால், இன்னும் சில அளவுகோல்களை சேர்க்க பரிந்துரைக்கலாம். காலையில் ஒரு மனிதனை வம்படியாக எழ வைப்பது எவ்வளவு பெரிய வன்முறை என்பது நாம் அவர்களாக இருந்தால் தான் தெரியும்! பள்ளிக் கூடங்கள்,பாடங்கள், ஆசிரியர்கள் கசக்கிறார்கள் என்றால் அதை சகித்துக் கொண்டு பன்னிரண்டு வருடங்கள் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்பது எவ்வளவு பெரிய வன்முறையை அவர்கள் மீது திணிக்கிறீர்கள்! அதன் மூலம் அவர்கள் என்ன பயன் அடைந்து விடப் போகிறார்கள் என நினைக்கிறீர்கள்? இல்லை, நீங்கள் தான் என்ன பயன் அடைந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? 
 
இந்தியாவில் வேலைக்கு போகும் இருவரில் ஒருவர் ஏதேனும் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம். அதாவது, உங்கள் அலுவலகத்தில் அருகருகே நீங்களும் உங்கள் நண்பரும் அமர்ந்து இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.இருவரில் ஒருவருக்கு ஏதோ ஒரு மன நோய்! சரி அது நண்பருக்கு என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு சர்க்கரை இருக்கிறதா? இரத்த அழுத்தம் இருக்கிறதா?  நீங்கள் ஆய்வுகளையோ தரவுகளையோ நம்ப வேண்டாம், உங்களிடமிருந்தும் உங்களை சுற்றி இருப்பவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். ஓடி ஓடி உழைத்து, காலை உணவு சரியாக மென்று சாப்பிட நேரம் இல்லாமல், மனைவியிடமோ, நண்பர்களிடமோ சிரித்து பேசி நாள் கடந்து, மேலதிகாரியிடம் திட்டு வாங்கி,யார் யாருக்காகவோ உழைத்து, மாத கடைசியில் பணமே இல்லாமல் அடுத்த மாதத்திற்காக தவம் கிடப்பதெல்லாம் என்ன வாழ்க்கை?

webdunia

 
பணம் தான் வாழ்க்கை என நியாயப்படுத்துவதில் என்ன ஆகி விடப் போகிறது? பணம் தான் வாழ்க்கையா என்று சற்று யோசித்து பாருங்கள்? ஜாதி, மதம், அழகு,நிறம்,மொழி, கொள்கை, அரசியல், தகுதி, நியாயம், தேர்வு என எல்லாமே அடுத்த நேரத்திற்கு உணவு இல்லையென்றால் பொய்யாகி போய் விடும். எவ்வளவு பெரிய முரண் இது. நீங்கள் வாழ தேவை உணவும் இருப்பிடமும் மட்டுமே. உடையும் நாமே சேர்த்துக் கொண்டு விட்டோம். சரி அதுவும் இருந்துவிட்டு போகட்டும். இதற்காக இயற்கை கொடுத்த அந்த  குழந்தை தன் சுயத்தை இழந்து, தன விளையாட்டை இழந்து, தன் நேரத்தை இழந்து  யாருக்காக, எதற்காக போராடுகிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்து அதுவும் உங்களை போல் ஆகிவிட வேண்டுமா? 
 
சற்றே சிந்தித்து பாருங்கள், எவ்வளவு பட்டதாரிகள் வீட்டுக்கு வீடு வாசப்படி போல் வீட்டுக்கு வீடு பட்டதாரிகள் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் வேலை என்பதெல்லாம் நடக்கும் காரியமா? ஒரு பக்கம் இயற்கையை அழிக்கும் தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டம் வழுத்து வரும் நிலையில், அதே தொழிற்சாலைகள் ஆள் எடுக்கும் பொழுது,முதல் ஆளாக நிற்கிறார்கள் நம் இளைஞர்கள். இன்று இயற்கை காப்பதற்கான போராட்டங்களில் இளைஞர்களின் பங்கு குறைவாக இருப்பதற்கு காரணமே, அவனுக்கும் இயற்கைக்கும் இடையே விழுந்த பிளவு தான். 
 
இவற்றை சரிப்படுத்த வேண்டுமானால், கல்வி முறையை மாற்ற வேண்டும். அதை இந்த அரசாங்கங்கள் செய்து விடும் என நினைக்கிறீர்களா? நானே தலைமை அதிகாரி ஆனாலும் செய்ய முடியாது. அதுதான் எதார்த்தம். நீங்களே கல்வி முறையை மாற்றுங்கள். இயற்கையோடு இணைந்த கல்வி முறை. அமைதியை மட்டுமே போற்றும் கல்வி முறை, ஊடகத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் கல்வி முறை, தற்சார்பு கல்வி முறை, பாலியல் கல்வி முறை. இதை நீங்கள் பணம் கொட்டி கொடுக்கும் பள்ளிகள் சொல்லி தராது. அதற்கு தேவை எல்லாம் மதிப்பெண்கள் தான். இந்த கல்வி முறையில் ஆசிரியர்கள் தேவை இல்லை. மதிப்பெண்கள் தேவை இல்லை. தற்கொலைகளும் தேவையே இல்லை. 

webdunia

 
இவையெல்லாம் உங்களுக்கு தெரியவில்லை என்றால் கவலையே வேண்டாம். குக்கூ காட்டுப்பள்ளி போன்று தனியார் பள்ளிகள் உருவாக்க உறுதுணையாக இருங்கள்.  ஜவ்வாது மலை அடிவாரத்தில் புளியனுர் கிராமத்தில் இயங்கி வரும் குக்கூ காட்டுப் பள்ளி மாற்று கல்வி சிந்தனையாளர்களின், இயற்கை ஆர்வலர்களின் வாழ்நாள் கனவு. வாழ்வின் ஒரு முறையாவது சென்று விட்டு வாருங்கள். அவர்களின் பாடமுறை, சொல்லிக் கொடுக்கும் தன்மை எல்லாம் ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ் நாள் கனவு. இப்படி ஒரு பள்ளிக்காக தான் ஏங்கி தவிக்கிறார்கள். 
 
இப்படி பள்ளிகளை உருவாக்கி தர வேண்டியது நம் கடமை. குழந்தைகளுக்கு தேவை பள்ளிக் கஊடங்கள் தானே ஒழிய, ஆசிரியர்கள்’ இல்லை. அவர்களின் நேரத்தை அவர்கள் விரும்பியது போல் செலவு செய்யட்டும்.  
 
மனித வாழ்வோடு எந்த சம்பந்தமும் இல்லாத, வகுப்பறைகளும், பாழடைந்த புது புத்தகங்களும், ஆசிரியர்களும் கால அட்டவணைகளும், திட்டும் கேலியும், போட்டியும் மதிப்பெண்ணும் இல்லாத ஆரோக்கியமான சூழலை உங்கள் குழந்தைக்கு உருவாக்கி கொடுங்கள். வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களுமே முதல் மதிப்பெண் தான் வாங்க வேண்டும் என்றால் யார் தான் இரண்டாம் மதிப்பெண் வாங்குவது? அனைவருமே ஆசிரியராக, கலெக்டராக, மருத்துவராக, பொறியாளராக வேண்டும் என்றால் யார் தான் விவசாயம் செய்வது?
 
கஷ்டங்கள் எதில் தான் இல்லை? இந்த வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை விட இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையில் கஷ்டங்கள் குறைவு தான். அனுப்பி வையுங்கள். இயற்கைக்காக, நீங்கள் பெற்ற குழந்தையை இயற்கையிடமே அனுப்பி வையுங்கள். அது தான் நீங்கள் இந்த மனித இனத்திற்கு செய்யப் போகும் கைமாறு.
 
- சந்தோஷ் ஸ்ரீ

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளை மாளிகைக்கு செல்கிறது நடிகை சமந்தாவின் சேலை