மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து பல்வேறு பரபரப்பான தகவல்களை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அணியினர் கூறிவருகின்றனர்.
சசிகலாவிற்கு எதிராக களம் இறங்கிய ஓ.பி.எஸ் அணி, ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை, சி.பி.ஐ விசாரணை என அனைத்து விசாரணைகளும் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், மரணம் அடைந்த வரை எழுந்த ஏராளமான சந்தேகங்களையும், கேள்விகளையும் அவர்கள் எழுப்பி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு கூட முன்னாள் சபாநாயாகர் பி.எச்.பாண்டியன் மற்றும் மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களிடம், ஜெ. வின் மரணம் குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பினர். இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் நேற்று இரவு முழுவதும், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனது விட்டில் ஆலோசனை நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. அதில், முன்னாள் அமைச்சர் மாஃபா பண்டியராஜன், அதிமுக எம்.எல்.ஏ செம்மலை, பொன்னையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன் “ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதை நேரில் பார்த்த வேலைக்காரப் பெண் காணவில்லை. அவர் தற்போது எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. அவரை கண்டுபிடித்தால் பல உண்மைகள் வெளிவரும்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவர் நன்றாக இருக்கிறார். இட்லி சாப்பிட்டார் என நாங்கள் சொன்னோம். தம்பிதுரை எங்களை அப்படி சொல்ல சொன்னார். அவர் கூறியதைத்தான் நாங்கள் செய்தியாளர்களிடம் கூறினோம்” எனக் கூறினார். இந்த விவகாரம் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.