மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தன. அதன் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கையை கூட்டியக்க தலைவர்கள் இணைந்து வெளியிட்டனர். சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டியக்கம், மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் செயப்ல்படும் என்று அறிவித்தனர்.
அதன்பிறகு, பொதுமக்கள் பிரச்சனைகள் அனைத்திலும் நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து, மக்கள் நல கூட்டியக்கமாக செயல்பட்டது. பின்னர், 2016 சட்டமன்ற தேர்தலில் நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து மக்கள் நலக் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுத்தது.
பின்னர், இந்த கூட்டணியில் தேமுதிக, தமாகா ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்தித்தன. ஆனால், இந்த கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இதனையடுத்து, இந்த கூட்டணியில் இருந்து தேமுதிக, தமாகா ஆகியவை விலகின.
இந்நிலையில், திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் மற்ற கட்சிகள் பங்கேற்காமல் தடுக்கும் பணியில் வைகோ ஈடுபட்டதாகவும், அவர்களுக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே வைகோ ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த கருத்திற்கு மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்கள் மறுப்புத் தெரிவிந்திருந்தனர்.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் மக்கள் நல கூட்டணி அமைத்தது போல புதுவையிலும் இந்த கூட்டணி அமைந்தது. இதன் தலைவராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விசுவநாதன் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இதன் தொடர்ச்சியாக நாராயணசாமி மக்கள் நலக் கூட்டணியிடம் ஆதரவு கோரியிருந்தார்.
மக்கள் நல கூட்டணியினர் இது சம்பந்தமாக எந்த தகவலும் வெளியிடாத நிலையில், விடுதலை சிறுத்தை கட்சி காங்கிரசை ஆதரிப்பதாக தன்னிச்சையாக முடிவு எடுத்தது.
அதன்படி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து ஆதரவு கடிதம் கொடுத்தனர்.
இதனால், புதுவையில் மக்கள் நல கூட்டணியில் பூசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் நலக் கூட்டணி இனி இணைந்து செயல்படாது எனவும் தெரிய வந்துள்ளது.