மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைகளுக்கு சம்பளத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு குறைந்தபட்ச தற்காலிக வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் மாகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள சாலைகளை சீர்படுத்துதல், நீர்நிலைகளை தூர்வாருதல், சாலையோர மரங்கள் வளர்த்தல் உள்ளிட்ட பல சிறு வேலைகள் 100 நாள் வேலை பணியாளர்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களுக்கு தினசரி ரூ.294 ஊதியமாக அளிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் 2024-25க்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.86 ஆயிரம் கோடி நிதி உயர்த்தி ஒதுக்கப்பட்டது. அதன்படி இந்த நிதியாண்டு இந்த மார்ச் மாதத்துடன் முடிவடையும் நிலையில் ஏப்ரல் 1 புதிய நிதியாண்டு முதல் உயர்த்தி ஒதுக்கப்பட்ட நிதியின் அடிப்படையில் 100 நாள் பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் உயர்த்தப்பட உள்ளது.
தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.294 சம்பளம் அடுத்த மாதம் முதல் உயர்த்தப்பட்டு ரூ.319 ஆக வழங்கப்பட உள்ளது. இது 100 நாள் வேலை பார்க்கும் கிராமபுற மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.