ஜனவரி 26 ஆம் தேதி 69 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் வரும் ஜனவரி 26 ஆம் தேதி 69 ஆவது குடியரசு தினவிழாக் கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் காந்தி சிலை மற்றும் காமராஜர் சிலை அருகே பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு குடியரசு தினக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. குடியரசு தின விழாவில் நடைபெறும் காவல் துறையினரின் அணி வகுப்புக்கான ஒத்திகை தற்போது பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உளவுத்துறை மூலமாக, குடியரசு தின விழாவைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
இதற்காக நாடு முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்த பட்டுள்ளன. தமிழக காவல்துறை சார்பில் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், மால்கள், தியேட்டர்கள் மற்றும் கோயில்கள் அகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஜனவரி 31 ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்திற்கு ஏழு அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.