பெற்ற தாய் தந்தையை ஒருமுறையாவது விமானத்தில் பறக்க வைக்க வேண்டும் என ஒரு பிள்ளை கனவு காணுவது என்பது வழக்கமான ஒன்றே. ஆனால் ஒரு தொழிலதிபர் தன்னுடைய சொந்த கிராமத்தை சேர்ந்த முதியவர்கள் 120 பேர்களை விமானத்தில் பறக்க வைத்துள்ளார்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழில் செய்து வருபவர் ரவிகுமார். இவர் தனது சொந்த கிராமமான தேவராயன்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த சுமார் 120 முதியவர்களை கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்று சென்னை மெரீனா, காஞ்சி காமாட்சி கோவில் உள்பட பல இடங்களை சுற்று காண்பித்துவிட்டு மீண்டும் கோவை திரும்பவுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னரே தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் துணையுடன் விமானத்தில் செல்லவுள்ள முதியவர்களை தேர்வு செய்து இன்று அவர்கள் அனைவரும் விமானத்தில் பறந்துள்ளனர்.
இதுவரை விமானத்தை வானில் அண்ணாந்து மட்டுமே பார்த்து கொண்டிருந்த அந்த கிராமத்து முதியவர்கள் இன்று விமானத்தில் ஏறி பயணம் செய்தபோது அவர்களுடைய முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து தனது முழு திருப்தி அடைந்ததாக தொழிலதிபர் ரவிகுமார் கூறியுள்ளார். அவருடைய இந்த அரிய முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.