விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவாவை வேட்பாளராக அக்கட்சி தலைமை அறிவித்திருந்தது. இவர் திமுகவின் விவசாய அணி செயலாளராக உள்ளார்.
அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம்) போட்டியிடுவார் என அந்த கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.