சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் இறுதி அஞ்சலிக்கு நாடெங்கிலும் இருந்து முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இதனால் அவரால் கலைஞரின் இறுதி அஞ்சலி நிகழ்சியில் நேரில் பங்கேற்க முடியவில்லை. அதனால் கலைஞரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில் கலைஞர் இறந்த செய்தியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்க முடியாதது எனக்கு வருத்தமளிக்கிறது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நான் அமெரிக்கா வந்திருந்தாலும் என் நினைவுகள், எண்ணம் அனைத்தும் கருணாநிதியின் மேலேயே இருக்கிறது. என்னை விஜி விஜி என பாசமாக அழைப்பார். அவரின் மறைவை என்னால் தாங்க முடியவில்லை எனக் கூறி அதற்கு மேல் பேச முடியாமல் அவர் கதறி அழுதார்.
இந்த வீடியோவானது பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கும் விதமாக இருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பிய விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் மெரினாவுக்கு சென்று கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.