எம்பிசி பிரிவில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது, ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீடு வழங்கியது தவறானது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து வன்னியர்களுக்கு இந்த ஆண்டு முதல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என பாமக தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில் அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தின் இந்த ஆணை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்திருப்பது வன்னிய சமூக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்து, அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் தீர்ப்பு வழங்க வேண்டும். எனக் கூறியுள்ளார்.