சென்னையில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் இருந்து 33 சிறுவர்கள் தப்பிச் சென்ற விவகாரம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் உள்ள புரசைவாக்கத்தில் அமைந்துள்ள சிறுவர்கள் சீர்த்திருத்த பள்ளியில், மாணவர்கள் 33 பேர் தப்பியோடிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீர்திருத்த பள்ளிகளை உடனடியாக சீரமைத்து அந்த குற்றங்கள் மீதான விசாரணையை துரிதபடுத்தி இளம் குற்றவாளிகளுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் நீதி கிடைத்திட இந்த அரசு வழிவகை செய்யவேண்டும்.
3 ஆண்டுகளில் 100 மாணவர்களுக்கு மேல் சீர்திருத்த பள்ளிகளில் இருந்து தப்பியோடியதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. தப்பி சென்ற 33 பேரில் 24 பேரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். தப்பியோட முயன்ற சிறுவர்களை காவலர்கள் சிறைபிடிக்க முயன்ற போது தங்கள் உடலை தாங்களே பிளேடால் அறுத்து கொண்டு தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டுள்ளனர் என்பது மிகவும் வேதனைக்குரியது.
சிறுவர் சீர்திருத்த பள்ளியா, அல்லது சிறுவர்களை சீரழிக்கும் பள்ளியா என்ற மிகப்பெரிய கேள்விகுறி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. அரசால் நடத்தப்படும் பள்ளிகள், விடுதிகள், சிறுவர் சீர்திருத்த சிறைச்சாலைகள் எந்த வித அடிப்படை வசதிவாய்ப்புகளும் செய்து தரப்படாமல், மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பு இன்றி இருப்பதால் அங்கு இருக்கும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மனிதாபிமான அடிப்படையில் அந்த குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் அவர்களை தினந்தோறும் அக்கறையோடு கவனிக்கும் வண்ணம், நல்ல மனநல மருத்துவர்கள், நல்ல உணவு, படிப்பு வசதி, ஆரோக்கியமான பொழுதுபோக்கு அம்சங்கள், நீதி நெறிகளை தரும் நூலகம் போன்றவற்றை உருவாக்கி உண்மையான சிறுவர் சீர்திருத்த பள்ளியாக நடத்த வேண்டும்.
சிறுவயதிலேயே இவர்கள் இந்த நிலைக்கு போக காரணம் மது பழக்கமும், போதை பழக்கமும் தான். 33 பேர் தப்பித்து செல்லும் வரை இந்த சிறுவர்களை யாரும் கண்காணிக்கவில்லை என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஒரு நாளில் எடுத்த முடிவு போல் இல்லாமல் நீண்ட நாட்களாக திட்டமிட்டு செய்த இந்த சிறுவர்கள், இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் அளவு காவல்துறை கவனக் குறைவாக உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு கவனமுடன் செயல்பட வேண்டும்"
இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.