Publish Date: Fri, 08 Jul 2016 (06:20 IST)
Updated Date: Fri, 08 Jul 2016 (06:20 IST)
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் தொகுதியான ஆர்.கே.நகர் மற்றும் பல பகுதிகளில் போதை சாக்லேட் விற்பனை செய்யப்பட்டது.
இந்த தகவல் அறிந்து மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். உடனே அனைத்து இடங்களிலும் காவல் கண்காணிப்பு மூலம் இது போன்ற சட்டவிரோத செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
ஏற்கனவே, மதுக்கடைகள் மூலம் சீரழிந்துள்ள நிலையில் இது போன்ற போதை சாக்லேட்களை அனுமதிக்க முடியாது.
ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றவுடன் 500 மதுக்கடைகள் மூடப்படும் என கையெழுத்திட்டார். ஆனால், எந்தெந்த பகுதிகளில் எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளது விரிவாக பொது மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. எனவே, இது குறித்து, முதல்வர் ஜெயலலிதா வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என சவால் விடுத்துள்ளார்.