பல்வேறு ஊழல் புகாரில் சிக்கி வரும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பவ்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள விவகாரம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயபாஸ்கர் வீட்டில் ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு ரூ.89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதில் இருந்தே அவருக்கும், தமிழக அரசுக்கும் சிக்கல் தொடங்கியது. அதன் பின் வருமான வரித்துறையினர் அவரிடமும், அவரின் குடும்பத்தாரிடமும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்நிலையில், அவரின் சொந்த ஊரான திருவேங்கைவாசலில் உள்ள அவரது 100 ஏக்கர் நிலம் மற்றும் குவாரிகளை முடக்குமாறு, புதுக்கோட்டை மாவட்ட நில பதிவாளர் சசிகலாவிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பினர். அதையடுயடுத்து, விஜயபாஸ்கரின் குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், அவருக்கு சொந்தமான நிலங்களை சசிகலா முடக்கினார். எனவே, பதிவாளர் சசிகலாவை விருதுநகர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், சீல் வைக்கப்பட்ட குவாரி இன்று வழக்கம்போல் செயல்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.
இப்படி தொடர்ந்து ஊழல் புகார் மற்றும் அதிகார வரம்பு மீறல் பிரச்சனைகளில் சிக்கி வரும் விஜயாபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களில் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே, இந்த விவகாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் விவகாரம் தொடர்பாக டெல்லியில் முகாமிட்டிருக்கும் விஜயபாஸ்கர், அங்கு யாரையாவது பிடித்து தான் சந்திக்கும் சிக்கலில் இருந்து எப்படி தப்பிக்கலாம் எனக் காய்கள் நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் தினகரன், ஒரு பக்கம் எதிர்கட்சிகள், ஒரு பக்கம் ஓ.பி.எஸ், ஒரு பக்கம் பாஜக, ஒரு பக்கம் விஜயபாஸ்கர் பிரச்சனை என பலமுனை தாக்குதல் எழுந்துள்ளதால், இதை எப்படி சமாளிக்கலாம் என்ற ஆலோசனையில் முதல்வர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
உட்கட்சி பிரச்சனைகள் அனைத்தும் தீர்த்து விட்டு, விஜய பாஸ்கரின் பதவி பறிப்பு சம்பவத்தை முதல்வர் அரங்கேற்றுவார் எனக்கூறப்படுகிறது. விஜயபாஸ்கர் விவகாரத்தில் முதல்வர் வழக்கம்போல் அமைதி காப்பாரா இல்லை அதிரடி முடிவெடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.