குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ், உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது.
இந்த சோதனையில் பல ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரத்தில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தமிழக காவல்துறை மற்றும் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. எனவே, டிஜிபி ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட பல கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே, இந்த விவகாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. விஜயபாஸ்கர் ராஜினாமாவை எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பும் விரும்புவதாக தெரிகிறது.
இது தொடர்பாக விஜயபாஸ்கர் கடந்த 7ம் தேதி முதல்வர் பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, நான் ராஜினாமா செய்ய முடியாது என அவர் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியானது.
அப்போது முதல்வரிடம் எகிறிய விஜயபாஸ்கர் “ நான் ராஜினாமா செய்ய மாட்டேன். ரெய்டு நடந்தாலே நான் குற்றவாளி கிடையாது. உங்கள் மகன் மற்றும் சம்பந்தி வீட்டிலும் ரெய்டு நடந்தது. நீங்கள் ராஜினாமா செய்து விட்டீர்களா?” என கேள்வி எழுப்பினாராம்.
அதேபோல், ஓ.பி.எஸ்-க்கு எதிராகவும் வழக்கு இருக்கிறது. அவர் ராஜினாமா செய்துவிட்டாரா. என் மட்டும் ஏன் வற்புறுத்துகிறீர்கள்? என காட்டமாக பேசினாராம்.