விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இன்று டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடி நடந்ததாகவும், 13 சுற்றுகள் எண்ணப்பட்ட பின், திடீரென 19 ஆவது சுற்றுக்கு சென்று விட்டதாகவும் மதிய சாப்பாடு நேரத்தில் எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு ஒரு சில நிமிடங்களில் ஐந்து சுற்றுகள் வாக்கு எண்ணப்பட்டதாகவும் இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடைசி நேரத்தில் அமைச்சர்கள் உள்ளே வந்து எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு அதன் பின் வாக்கு எண்ணிக்கை நடத்தியதாகவும் தபால் ஓட்டுக்களை அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு எண்ணியதாகவும் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆதாரங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம் என்றும் விருதுநகர் தொகுதியில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பவில்லை, மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று மட்டுமே கோரிக்கையை எழுப்பி உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.