நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று மதுரை செல்லும் நிலையில், காலை முதலே விமான நிலையத்தில், ரசிகர்களும், தொண்டர்களும் குவியத் தொடங்கியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறார் விஜய். தவெகவின் பூத் கமிட்டியை வலுப்படுத்தும் விதமாக 5 மண்டலங்களில் பூத் கமிட்டி ஏஜெண்ட் மாநாட்டை நடத்துகிறது தவெக. முன்னதாக கோவையில் நடந்த பூத் கமிட்டி மாநாட்டின்போதே ஏராளமான தொண்டர்கள் குவிந்து விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த அரசியல் பணிகள் ஒருபக்கமிருக்க தனது கடைசி படம் என விஜய் அறிவித்த ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு மறுபக்கம் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் சில காட்சிகள் திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் படமாக்கப்படுகிறது. இதற்காக இன்று நடிகர் விஜய் விமானம் மூலமாக மதுரை வந்து அங்கிருந்து வாகனம் மூலமாக திண்டுக்கல் செல்கிறார்.
கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் மதுரைக்கு விஜய் வரும் நிலையில் அவரை காண ரசிகர்களும், தொண்டர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர். இன்று மாலைதான் விஜய் வர உள்ள நிலையில் காலையிலேயே விமான நிலையம் நோக்கி தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
Edit by Prasanth.K