பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் பிடித்த மாணவ மாணவிகளுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்று வரும் நிலையில் விஜய் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
பத்து, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த எனது தம்பி தங்கைகளுக்கு வாழ்த்து என்று கூறிய விஜய், பாசிட்டிவ் பவர் இருப்பவர்களை பார்த்தால் ஒரு சக்தி கிடைக்கும் என்றும் இன்று அந்த சக்தி எனக்கு கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள் தான் என்றும், நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்றும், மற்ற துறையை தேர்ந்தெடுப்பது போல் அரசியலையும் மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் அரசியல் என்பதையும் ஒரு வேலை வாய்ப்பு ஆப்சன் ஆக வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி அரசாங்கத்தை விட நம்ம வாழ்க்கையை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உங்களுடைய மனக்கட்டுப்பாடு, தனிமனித ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும், இப்போதைக்கு நன்றாக படியுங்கள், மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும் போதை பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகி விடக்கூடாது என்றும் போதை பழக்கத்தை எந்த காரணத்தை முன்னிட்டும் பழக்கம் ஆகி கொள்ள கூடாது என்று உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.