நேற்று விஜய்யின் பீஸ்ட் ட்ரெய்லரை வெளியிட்ட திரையரங்கை ரசிகர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று மாலை ட்ரெய்லர் வெளியானது.
பீஸ்ட் படத்தின் ட்ரெய்லரை சில திரையரங்குகள் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக திரையிட்டன. திருநெல்வேலியில் உள்ள திரையரங்கு ஒன்றில் ட்ரெய்லர் திரையிடப்பட்ட நிலையில் அதை பார்க்க வந்த ரசிகர்கள் இருக்கைகள், கண்ணாடியை உடைத்து திரையரங்கை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் “பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்ட திரையரங்கை ரசிகர்கள் நேற்று சேதப்படுத்தினர். திரையரங்கு உள்ளே எது நடந்தாலும் திரையரங்கு உரிமையாளர்கள் தான் பொறுப்பு. இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் திரையரங்கு உரிமம் ரத்து செய்ய வாய்ப்புள்ளது. இலவசமாக ட்ரெய்லர் வெளியிடுவது போன்ற விஷயங்களை திரையரங்கு உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.