Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த பூச்சாண்டி எல்லாம் வேண்டாம்.. கெத்தாக தேர்தலை சந்திக்க வாருங்கள்: ஸ்டாலினுக்கு விஜய் சவால்..!

Advertiesment
விஜய்

Mahendran

, சனி, 20 செப்டம்பர் 2025 (15:26 IST)
'தமிழக வெற்றிக் கழகம்' கட்சித் தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்பு பயணங்களுக்கு திமுக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாக குற்றம்சாட்டினார். இன்று நாகப்பட்டினத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசியபோது, அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் பேசியதாவது:
 
"நான் பேசுவதே வெறும் 3 நிமிடங்கள்தான். ஆனால், நீங்கள் 10 நிமிடங்களுக்கு மேல் பேசக் கூடாது என நிபந்தனை விதிக்கிறீர்கள். அரசியல் தலைவர்களான பிரதமர் மோடி அல்லது அமித் ஷா தமிழகம் வந்தால் இப்படி செய்வீர்களா? செய்து பாருங்கள்.
 
திருச்சி, அரியலூருக்கு சென்றபோது பெரம்பலூர் செல்லவிருந்தது. ஆனால் செல்ல முடியவில்லை.சுற்றுப்பயண அட்டவணை போட்டபிறகு சனிக்கிழமை மட்டுமா? என்று பேசப்பட்டது. உங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்றுதான் வார இறுதி நாள்களில் திட்டமிட்டோம்.
 
சரி, அடுத்து நம் மக்களை சந்திப்பதற்கு, சொந்தங்களை சந்திப்பதற்கு எத்தனை கட்டுப்பாடுகள்? அந்த இடத்தில் அனுமதி இல்லை, இந்த இடத்தில் அனுமதி இல்லை என்று ஒன்றுமில்லாத காரணம் சொன்னார்கள்.அங்கு பேசக்கூடாது, இங்கு பேசக்கூடாது, 10 நிமிடம் தான் பேச வேண்டும், நான் பேசுவதே 3 நிமிடம்தான். பேசக்கூடாது என்று சொன்னால் நான் எதைத்தான் பேசுவது?
 
அரியலூரில் சென்றபோது மின்தடை, திருச்சியில் பேசும்போது ஸ்பீக்கருக்கு செல்லும் வயர் கட்.. ஆர்எஸ்எஸ் தலைவர், பிரதமர் மோடி, அமித் ஷா வந்தால் இப்படி செய்வீர்களா? செய்துதான் பாருங்களேன். முடியாது அல்லவா? நீங்கள் தான் மறைமுக உறவுக்காரர்கள் ஆச்சே...
 
அடுத்து ஒரு கண்டிஷன், பேருந்துக்குள்ளே இருக்க வேண்டும், கையை இவ்வளவுதான் தூக்க வேண்டும். மக்களை பார்த்து சிரிக்காதே, கை அசைக்காதே.. இப்படியெல்லாம் நிபந்தனைகள்.. முதல்வரே, மிரட்டிப் பார்க்கிறீர்களா? மக்களை சந்திக்க ஒரு இடம் கேட்கிறோம். ஆனால் நெருக்கடியான இடத்தை தருகிறீர்கள். இந்த அடக்குமுறை எல்லாம் வேணாம். அதுக்கு நான் ஆள் இல்லை. மாபெரும் சக்திகளின் பிரதிநிதி.
 
2026-ல் திமுக, தவெக இடையே மட்டும்தான் போட்டியே. இந்த பூச்சாண்டி வேலைகள் காட்டுவதை விட்டுவிட்டு தில்லா, கெத்தா நேர்மையாக தேர்தலை சந்திக்க வாருங்கள்.. கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை கொள்ளையடிக்கும் நீங்களா? இல்லை சொந்தமாக உழைத்து சம்பாதித்த நானா? இப்படியெல்லாம் தடைகள் போட்டால் இனி மக்களிடமே அனுமதி கேட்பேன்’ என விஜய் பேசினார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் பெண்கள் நடத்திய போலி கால்சென்டர்கள்: 42 சிம்கார்டுகள் பறிமுதல்..!