ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் அழைப்பை ஏற்க மாட்டோம் என தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்திற்கு திரும்பி வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தவறான வழிநடத்தல்கள், மனக்கசப்புகள் காரணமாக பிரிந்து சென்றவர்கள் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும். பிரிந்து சென்றவர்கள் உயர்நீதிமன்ற தீர்ப்பின் யதார்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இதுபற்றி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ “எங்களை பார்த்து பயம் வந்து விட்டதா? இப்போது ஏன் அழைக்க வேண்டும்? பொதுச்செயலாளர்தான அனைத்தையும் முடிவு செய்ய முடியும். எங்களை அழைப்பதற்கே இவர்களுக்கு தகுதி இல்லை” என தெரிவித்தார்.
அதேபோல், இதுபற்றி கருத்து தெரிவித்த வெற்றிவேல் எம்.எல்.ஏ “துரோகத்தை செய்து விட்டு தற்போது அழைப்பு விடுக்கிறார்கள். அதிமுக ஒரு புதைக்குழி. எனவே, மீண்டும் அதில் இணைய மாட்டோம். அப்படி சென்றால் நாங்கள் அழிந்து விடுவோம். வேண்டுமனால், ஒரு சிலரை நீக்கிவிட்டு அவர்கள் அமமுகவில் இணையட்டும்” என தெரிவித்தார்.