தூத்துகுடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல பல்வேறு கட்சி தலைவர்கள் தூத்துகுடிக்கு சென்று வரும் நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் அவர்களும் நேற்று தூத்துகுடிக்கு சென்றார்.
ஆனால் அவரை தூத்துகுடி விமான நிலையத்திலேயே மடக்கிய போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த நிலையில் திடீரென தூத்துகுடிக்கு வந்த விழுப்புரம் போலீசார், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகனை கைது செய்து திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வேல்முருகனை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் வேல்முருகன் கைதை கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் சென்னை போரூர் அருகே உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். சுங்கச்சாவடியை தாக்கிய வழக்கில் கைதான வேல்முருகனை விடுவிக்க கோரி இன்னொரு சங்கச்சாவடியை அவரது கட்சியினர் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.