Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலையை தமிழக அரசே செய்யவேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி கோரிக்கை!

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலையை தமிழக அரசே செய்யவேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி கோரிக்கை!
, புதன், 4 ஆகஸ்ட் 2021 (16:11 IST)
எழுவர் விடுதலை சம்மந்தமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இது சம்மந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கை.

“ஹரியானா மாநில அரசு மற்றும் பிறர் எதிர் ராஜ்குமார் என்கிற பிட்டு வழக்கில் நேற்று (03.08.2021 ) தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரம், மாநில அரசுகள் பயன்படுத்தக்கூடியதே தவிர ஆளுநர் தன்னிச்சையாக அதைப் பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது. தண்டனைக் குறைப்பு தொடர்பாக மாநில அரசின் அறிவுரை ஆளுநரைக் கட்டுப்படுத்தும் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

தண்டனைக் குறைப்புச் செய்ய ஒவ்வொரு சிறைவாசிக்கும் தனித்தனி ஆணை தேவையில்லை, பொதுவாக வழங்கப்படும் ஆணை அது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161-ன் கீழ் தனக்கு உள்ள அதிகாரத்தை மாநில அரசு பயன்படுத்தும்போது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 433a-ல் சொல்லப்பட்டுள்ளவற்றை அது செல்லாமல் ஆக்கிவிடும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயேகூட மாநில அரசு தண்டனைக் குறைப்பு செய்ய முடியும். எனினும், நிர்வாக விதிகள் மற்றும் அரசியலமைப்புச் சட்ட நாகரிகம் ஆகியவற்றின் காரணமாகவே அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161-ன் கீழ் விடுதலை செய்யப்படுவதாக இருந்தால் மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலைப் பெறலாம் என்று தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.தண்டனைக் குறைப்பு செய்யப்படும் நபர் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்திருந்தால் அவரை விடுவிப்பதற்கு மாநில அரசுக்கே முழுமையான அதிகாரம் இருக்கிறது எனக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், அவர் ஒரு வேளை 14 ஆண்டுகள் சிறை வாசத்தை முடிக்காது இருந்தால் உறுப்பு 161-ன் கீழ் அவரை விடுவிப்பதற்கு ஆளுநருக்கு அறிவுரை வழங்கலாம் என்று தெளிவாகக் கூறியுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யவேண்டுமெனத் தமிழக அரசு அளித்த அறிவுரையைத் தமிழ்நாடு ஆளுநர் நிறைவேற்றாமல் காலதாமதம் செய்ததும், பின்னர் அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதும் சட்டவிரோதம் என்பதை உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின்மூலம் தெளிவாக அறிய முடிகிறது. இந்நிலையில், தங்களது மேலான பரிசீலனைக்குப் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறேன்:

1. உச்ச நீதிமன்றத்தின் 03.08.2021 தேதியிட்ட தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டுச் சிறைகளில் உள்ள 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த சிறைவாசிகள் அனைவரையும் மாநில அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலையைப் பொறுத்தளவில் அது அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161-ன்கீழ் வருவதால் அவர்களை விடுவிக்குமாறு ஆளுநருக்குப் புதிதாக அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மாநில அரசின் அறிவுரைக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் நடக்கவேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டு இருப்பதால் மீண்டும் அவர் அதைத் தாமதப்படுத்தவோ, குடியரசுத் தலைவருக்கு அனுப்பவோ கூடாது என்பதையும் தமிழக அரசு ஆளுநருக்குச் சுட்டிக்காட்டவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

3. அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161-ன் கீழ் தண்டனைக் குறைப்புச் செய்வது தொடர்பாக இதுவரை தமிழக அரசு எந்தக் கொள்கையையும் உருவாக்கவில்லை என்று பேரறிவாளன் அளித்த ஆர்டிஐ விண்ணப்பத்துக்கு 04.10.2019 அன்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது வியப்பையும் வேதனையையும் அளிக்கிறது. மனித உரிமைகளின்பால் மதிப்பு வைத்துள்ள தங்களது தலைமையிலான அரசு, அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161-ன் கீழ் தண்டனைக் குறைப்புச் செய்ய வேண்டுமென எதிர்காலங்களில் வரும் முறையீடுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக ஒரு கொள்கையை உருவாக்கி எதிர்வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு – அமைச்சரவை ஒப்புதல்!