தமிழகத்தில் வர்தா புயலால் ரூ.6,700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக கூட்டமைப்பு அசோசெம் அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம் வர்தா புயல் வடதமிழகம் மற்றும் ஆந்திரா இடையே கரையை கடந்தது. வர்தா புயல் காரணமாக சென்னையில் கனமழை மற்றும் சூறைக்காற்று வீசியது. இதில் சென்னையில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
வர்தா புயலால் தமிழகத்தில் ரூ.6,700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக கூட்டமைப்பு அசோசெம் அமைப்பின் செயலாளர் டி.எஸ்.ராவத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தோட்டங்கள், வயல்கள் போன்றவை அழிந்துவிட்டன. பல இடங்களில் கால்நடைகள் இறந்துள்ளது. நகர்ப்புறங்களில் கார்கள், கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தொழில்கள் பாதிக்கப்பட்டன. மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
ரெயில், விமானம், பேருந்து என அனைத்து போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, சுற்றுலா ஆகியவை பாதிக்கப்பட்டன.
வர்தா புயல் ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் ரூ.6 ஆயிரத்து 700 கோடி அளவுக்கு மிகப் பெரிய பொருளாதார சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.