பாஜக கூட்டம் ஒன்றில் பேசிய வானதி சீனிவாசன் எம்எல்ஏ, நிர்வாகி ஒருவரை "அடுத்த ஜெயலலிதா" என்று புகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன், பெண் நிர்வாகி ஒருவரை "அடுத்த ஜெயலலிதா" என்று கூறினார். ஆனால் அதுகுறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல், "ஆளை விடுங்க சாமி" என்று கூறியது மேலும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களின் மற்ற கேள்விகளுக்கு அவர் சரளமாக பதில் அளித்தார். "தமிழகம் ஒரு காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருந்தது. ஆனால் தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது," என்று அவர் கூறினார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர், திமுக பிரமுகர் என்றும், "துணை முதல்வரை சந்தித்து புகைப்படம் எடுக்கும் அளவுக்கு அவர் செல்வாக்கு உடையவர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நடிகர் விஜய் அரசியல் குறித்த கேள்வியிலும் வானதி சீனிவாசன் தனது கருத்தை வெளியிட்டார். "விஜய் வெளியே வந்து மக்களோடு களத்தில் இருந்து அரசியல் செய்ய வேண்டும். எந்த நிலையில் இருந்தாலும் மக்களுடன் இருப்பவர்களுக்கு தான் வெற்றி கிடைக்கும். மக்களோடு நிற்காதவர்களுக்கு மக்கள் எப்போதும் முக்கியமான இடத்தை கொடுக்க மாட்டார்கள்," என்று அவர் கூறினார்.